மதுரை: மதுரையில் அடுத்தடுத்து நடந்த வன்முறைச் சம்பவங்கள் எதிரொலியாக கல்லூரிகளுக்கு முன்பாக போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் தேவர் ஜெயந்தி யின்போது தடையை மீறி பலரும் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், அதிக சத்தத்து டன் கூடிய ஹாரன்களை ஒலித்துக் கொண்டும், கூச்சல் இட்டபடியும் நகரின் பல்வேறு தெருக்களில் சுற் றினர். இதில் சிலர் சொக்கிகுளம் பகுதி மகளிர் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர். மாணவியரைக் கேலி செய்து காவலாளியைத் தாக்கினர்.
இச்சம்பவம் நடந்த 4 நாட்களில் இறந்தவர் உடலை ஏற்றிச்சென்ற வாகனத்துடன் சென்ற இளைஞர்கள் சிலர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரி அருகே மாணவியைக் கேலி செய்தனர். இதைத் தட்டிக்கேட்ட மாணவியன் தந்தையைத் தாக்கினர். இச்சம்பவங்கள் குறித்து செல்லூர், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர்.
பெண்கள் கல்லூரிகள் முன்பாக அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கல்லூரிகளுக்கு முன்பாக மாணவ, மாணவியர் காலை, மாலையில் வந்து திரும்பும் நேரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு முன்பு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து வாகனங்கள், கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸார் கல்லூரிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நவ.7-ம் தேதி முதல் இப்பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.