புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டிஒய் சத்திரசூட் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஷ்ட்டிரபதி பவனில் அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித்தின் பதவிக் காலம் நவ.7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் தன்னைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரைத்திருந்தார். திங்கள் கிழமையுடன் யுயு லலித்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது, 2024, நவ.10 ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.
நீதிபதி டிஒய் சந்திரசூட் கடந்த 2016ம் மே 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக 2013, அக்டோர் 31ல் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பணியாற்றினார். அலகாபாத் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு 2000ம் ஆண்டு மார்ச் 29 முதல் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.
மும்பை நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகிப்பதற்கு முன்பாக, கடந்த 1998-ம் ஆண்டு முதல் இந்தியாவின் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் அங்கம் வகித்துள்ள நீதிபதி சந்திரசூட், அயோத்தி நிலம் விவகாரம், தனியுரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல ஐபிசி பிரிவு 377 நீக்கம், ஆதார், சபரிமலை விவகாரம் போன்ற முக்கிய வழக்குகளின் அமர்வுகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
நீதிபதி டிஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் 16வது தலைமை நீதிபதியாக இருந்த ஒய்வி சந்திரசூட்டின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு பின்னர் 44 ஆண்டுகள் கழித்து மகன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்றார்.