ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் வெப்ப அலைக்கு பலி

ஜெனீவா : 2100ல் வெப்ப அலைக்கு ஐரோப்பாவில் ஆண்டுக்கு 90 ஆயிரம் பேர் பலியாவர் என அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கிறது.

ஐரோப்பிய சுற்று சூழல் கழக அறிக்கை:

உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வால் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்போது 2100-ம் ஆண்டில் ஐரோப்பாவில் தீவிர வெப்ப அலை ஏற்படும். ஆண்டுக்கு 90 ஆயிரம் பேரை உயிர்ப்பலி வாங்கும் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் என பதிவாகி வரும் சூழலில், இந்த மரண எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த நுாற்றாண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

1980-2020 வரை 40 ஆண்டுகளில் அதிக வெப்பத்தினால் மட்டுமே 1.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என காப்பீடு தரவுகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு மத்தியில், நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களில் ஜெர்மனியில் அதிக அளவாக 4 500 பேர், ஸ்பெயினில் 4000 பேர், இங்கிலாந்தில் 3200 பேர், போர்ச்சுகல்லில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் பல வாரங்களாக தொடர்ச்சியாக கடும் வெப்பத்தில் சிக்கி தவித்தன. இது வறட்சி நிலையை மோசமடைய செய்ததுடன், காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுத்தது.

இதுதவிர, மக்களின் சுகாதார பாதிப்புகளுக்கும் எச்சரிக்கை விடும் வகையில் சூழல் ஏற்பட்டது. பருவகால மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தியது.

சமீபத்திய வறட்சி நிலை 500 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமடைந்து காணப்படுகிறது என ஐரோப்பிய ஆணையமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை சார்ந்த அனைத்து மரணங்களையும் தடுக்க முடியும் என்றும் ஐரோப்பிய சுற்று சூழல் கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதன்படி, வெப்ப விளைவால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை குறைக்க, சுகாதார செயல் திட்டங்கள், நகரங்களை பசுமை மயமாக்கல், முறையான கட்டட வடிவமைப்பு, கட்டுமானம், பணி நேரம் மற்றும் காலங்களை சற்று மாற்றியமைத்து சரிப்படுத்தி கொள்வது போன்ற பரவலான முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.

ஆனால் பருவகால மாற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணிகளுடன் தொடர்புடைய விசயங்களால் வெப்ப அலைகள் அடிக்கடி நிகழ்ந்து, வருகிற ஆண்டுகளில் இந்த மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை தெரிவிக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.