பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு

பிரதமரின் வருகையையொட்டி மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் 1500 காவலர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் நாளை மறுநாள் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர், ஆளுநர், மற்றும் முதல்வர் ஆகியோர் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தருவதையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
image
இந்நிலையில், மதுரை மாநகர் மற்றும் விமான நிலையம் ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக உள்ளது. இதனால் ட்ரோன் கேமராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும். ஆதலால் பயணிகள் காலதாமதமின்றி சற்று முன்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
image
அதேபோல், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வானவெடிகள் வெடிக்க வேண்டாம் எனவும், புகைகள் வருமாறு எதையும் எரிக்க வேண்டாம் எனவும் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும் மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.