கோவை: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. ஒற்றை ஓநாய் தாக்குதல் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கொச்சியில் இருந்து வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய வருகின்றனர்.
சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, ஜமாலியா, பெரம்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.