கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் இன்று காலை முதல் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு ஐ.எஸ் தொடர்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
புதுப்பேட்டையில் முகமது நிஜாமுதின் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.