டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கன, மிக கன மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு உள்ளது.
தாழ்வு பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும். தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ, தாழ்வுமண்டலமாகவோ வலுவடைய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஓன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவ.13,14 தேதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.