2022 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, இங்கிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளன.
அவுஸ்திரேலியா அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று (10) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் களமிறங்கவுள்ளன.
அனேகமாக 2022 ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டி இந்திய-பாகிஸ்தான் போட்டியாக இருக்கும் என்று ஏற்கனவே பல தரப்பினர் தெரிவித்துள்ளனர் அதற்குக் காரணம், இந்தப் போட்டியில் இதுவரை இந்திய அணி வெளிப்படுத்திய ஆற்றலேயாகும்
இதேவேளை ,நேற்று (09) நடைபெற்ற பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் பெற்றது.
இதனையடுத்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.
இதற்கமைய இன்றைய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில், வெற்றி பெறும் அணி 13 ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் களம் காணும்.