வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் அரை நிர்வாணத்தில் மாணவர்களை ஓடவிட்டு ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து 2 குழுவினர் விசாரணை நடத்தி வருவதாக சிஎம்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல்ரீதியாகவும் நடித்துக் காட்டச் சொல்லி தொந்தரவு தரப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வேலூர் பாகாயத்தில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி வளாகம் இயங்கி வருகிறது. இங்குள்ள மாணவர் விடுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தங்கியுள்ள மாணவர்களை, சீனியர் மாணவர்கள் சிலர் அரை நிர்வாணமாக கல்லூரி வளாகத்தை சுற்றி வருமாறு செய்வதும் மழை நீரில் கீழே உருளும்படியும் வற்புறுத்துவதுடன் ஆபாசமான முறையில் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்ற இந்த ராகிங் சம்பவத்தில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புதுடெல்லியில் உள்ள ராகிங் தடுப்புப் பிரிவுக்கும், சிஎம்சி மருத்துவ கல்லூரியின் சில பேராசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் முன்னணிஊடகவியலாளர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக சிலர் புகார் அனுப்பியுள்ளனர்.
பாலியல்ரீதியாக தொந்தரவு: மேலும், பாலியல்ரீதியாக நடித்துக் காட்டச் சொல்லி சீனியர் மாணவர்கள் துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில் பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்கள் கூறியுள்ளனர். மேலும், சிஎம்சி வேலூர் மாணவர்கள் என்ற பெயரில் ட்விட்டர் வழியாகவும் இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகள், சிஎம்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ராகிங்கில் மாணவர்கள் ஈடுபடும் காட்சிகள் எங்கள் கல்லூரி வளாகம்தான். இதுகுறித்த புகார் கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு வரப்பெற்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 7 சீனியர் மாணவர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளோம். ராகிங் தொடர்பாக கல்லூரி நிர்வா கத்தில் இருந்து மூத்த பேராசிரியர்கள் 6 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளோம். காவல் அதிகாரிகள், தன்னார்வலர்கள், ஊடகவியலாளர்கள் என 13 பேர் அடங்கிய கல்லூரியின் ராகிங் தடுப்பு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இயக்குநர் விளக்கம்: இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விக்ரம் மேத்யூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறும்போது, ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகிங் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாத புகார் வரப்பெற்றது. எங்கள் கல்லூரியில் ராகிங்கை எந்தவிதத்திலும் ஏற்க மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்போதைக்கு இதற்கு மேல் வேறு எதுவும் தெரிவிக்க முடியாது’’ என்றார்.