புதுடெல்லி: நீரவ் மோடியை விரைவாக இந்தியா கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இதனைத் தெரிவித்தார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பண மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். நாடு கடத்தப்படுவதற்கு எதிரான நீரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்த இங்கிலாந்து நீதிமன்றத்தின் முடிவை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அரிந்தம் பக்சி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ. 13,500 கோடியைப் பெற்று மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அவர் இங்கிலாந்து சென்றார். பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அதோடு, பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, நீரவ் மோடியை இந்தியா வசம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு, இங்கிலாந்து அரசை கேட்டுக்கொண்டது. எனினும், அவர் தன்னை நாடு கடத்தக் கூடாது என வலியுறுத்தி இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை நாடு கடத்துவதில் இங்கிலாந்து அரசுக்கு சிக்கல் நீடித்து வந்தது. எனினும், நீரவ் மோடிக்கு எதிரான குற்றத்தின் தன்மை கருதி அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், தென்கிழக்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீரவ் மோடியின் வழக்கை விசாரித்து வந்த லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தன்னை நாடு கடத்தக் கூடாது என நீரவ் மோடி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஸ்டார்ட் ஸ்மித், ராபர்ட் ஜே அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, நீரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நீரவ் மோடி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், அவரை இந்தியாவுக்கு கடத்துவதாக இருந்தால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். எனினும், இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை பாதிப்பு நோயால் நீரவ் மோடி பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.