தமிழ்நாடு போலீஸ் மட்டும் சரியா இருந்தா… பகீர் கிளப்பும் விக்கிரமராஜா!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நகர தலைவர் ஜேபி சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்கத்தை இரண்டாக பிரித்து பழனியை தலைமையாக கொண்டு புதிய வணிகர்சங்க மாவட்டம் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என‌ தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக முதலமைச்சரிடம் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள வணிக நிறுவனங்களின் மின்கட்டணத்தில் 15 சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் இரவு, பகல் என மின்கட்டணத்தின் அளவை பிரிக்காமல் ஒரே சீரான மின்கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடை கடையாக சென்று வியாபாரிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பொருட்கள் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் செய்த தவறுகளுக்கும் வியாபாரிகள்தான் பொறுப்பு எனக்கூறி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவதை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் போகிறோம்.

இதேபோல், இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்து மீள்வதற்காக விழிபிதுங்கி கொண்டிருக்கும் வியாபாரிகளை, தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ள வணிகவரித் துறை அதிகாரிகள் கடைக் கடையாக சென்று சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று வியாபாரிகள் காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள கடை வாடகை சீர்செய்யும் கமிட்டியில் வணிகர் சங்க நிர்வாகிகளையும் உறுப்பினராக சேர்த்து அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடைகளில் டீ விலை உயர்த்தப்பட்டதற்கு ஆவின் பால் விலை உயர்வு மட்டும் காரணமல்ல; வணிக வரி, கட்டிட வரி, வாடகை, கேஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் டீயின் விலை உயர்ந்துள்ளது.

அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது வணிகர் சங்க நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரிசி, கடுகு, மிளகு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் குட்கா பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நபர்கள் யார் என்று தமிழக காவல் துறைக்கு நன்றாக தெரியும். தமிழக காவல்துறை சரியாக செயல்பட்டால் 24 மணிநேரத்தில் குட்கா, புகையிலை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும் என்று விக்கிரமராஜா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.