வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காபுல் : ஆப்கானிஸ்தானில், உடற்பயிற்சி கூடமான ‘ஜிம்’ மற்றும் பூங்காவுக்கு செல்ல, பெண்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், 2021, ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயில சிறுமிகளுக்கு அனுமதி மறுத்தனர். பெண்கள் பணிபுரிவதற்கும் தடைவிதித்தனர்.
பொது இடங்களுக்கு வரும் பெண்கள், தலை முதல் கால் வரை துணியால் மறைக்கப்படும் ‘பர்தா’ அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்நிலையில், பெண்கள் ஜிம் மற்றும் பூங்காவுக்குச் செல்ல தடைவிதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
![]() |
இது குறித்து, அந்நாட்டின் ஒழுக்க பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மொகம்மத் அகெப் மொகாஜீர் தெரிவித்ததாவது: பெண்களும், ஆண்களும் வாரத்தில் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பூங்காவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாகவே இருக்கின்றனர். பெண்கள் ஹிஜாப் அணிவதையும் தவிர்க்கின்றனர்.
எனவே, பெண்கள் ஜிம், பூங்காவுக்குச் செல்ல தடை உத்தரவு பிறக்கப்பட்டு, இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. இதை, தலிபான் குழுக்கள் கண்காணிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement