சண்டிகர்,:சீக்கியர்களின் புனித நுாலை அவமதித்த வழக்கில் கைதாதி ஜாமினில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர், பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது பஞ்சாபில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பரித்கோட் மாவட்டத்தின் புர்ஜ் ஜவஹர் சிங் வாலா கிராமத்தில் உள்ள குருத்வாராவில் இருந்து ௨௦௧௫ ஜூனில், சீக்கியர்கள் புனித நுாலின் நகல் திருடப்பட்டது.
இதற்கிடையே, ௨௦௧௫ அக்டோபரில் பர்காரி என்ற பகுதியில், புனித நுாலின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் வீசப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தொடர்பாக, தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளரான பிரதீப் சிங் கைது செய்யப்பட்டார். ஜாமினில் உள்ள அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பரித்கோட் மாவட்டம் கோத்தபுராவில் பால் வியாபாரம் செய்து வந்த பிரதீப் சிங், நேற்று காலை கடையில் இருந்தபோது, ‘பைக்’கில் வந்த சிலர், அவரை சரமாரியாக சுட்டு தப்பியோடினர்.
இதில், பிரதீப் சிங் அங்கேயே உயிரிழந்தார். அவருடைய பாதுகாவலர் மற்றும் மற்றொரு நபர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, பஞ்சாபில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பரித்கோட்டில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவசேனாவைச் சேர்ந்த சுதிர் சூரி என்பவர், அமிர்தசரசில் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தக் கொலை நடந்து உள்ளது.
இந்த சம்பவத்துக்கு, பா.ஜ., – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement