துருக்கி சுற்றுலா தளத்தில் தற்கொலை படை தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் பரபரப்பான ஷாப்பிங் இடங்களில் ஒன்றான இஸ்திக்லால் அவென்யூவில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேருக்கு மேல் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி மாலை 4.20 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி மற்றும் காயம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். நகரின் தஸ்கிம் சதுக்கத்திற்கு அருகில் உள்ள இஸ்திக்லால் அவென்யூவில் உள்ள சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ள நிலையில், துருக்கிய ஊடகங்கள் இது தற்கொலைக் குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இது நகரின் பரபரப்பான ஷாப்பிங் தெருக்களில் ஒன்றாகும் மற்றும் பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியான காட்சிகள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தரையில் பல பேர் படுத்திருப்பதும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுவதும் வீடியோவில் தெரிகிறது. ஏற்கனவே இந்த நகரம் கடந்த காலங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லின் அட்டாதுர்க் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டு ஓர்டகோய் பகுதியில் உள்ள இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.