சென்னை: மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாக மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை, மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில், மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாக மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை, மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இதன் விவரம்:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமாக இருந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவத் துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நாட்டின் சொத்துகள். அவர்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.