கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அதேபகுதியில், இவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.
இதன் காரணமாக, அதில் போடப்பட்ட குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலைகைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தனர்.
இதைப்பார்த்து, அந்த பகுதிக்கு ஓடிவந்த மற்றொரு தொழிலாளியும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த பகுதிக்கு வந்த மற்ற தொழிலாளர்கள், அவர்கள் மூன்று பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் மூன்று போரையும் பரிசோதனை, செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.