நீலகிரி: நகை கடைகளில் மோசடி செய்து கடை நடத்திவந்த மூவரிடம் போலீசார் விசாரணை

கோவை நகை கடைகளில் நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டு உதகையில் நகை கடை நடத்தி வந்த மூவரிடம் கோவை மாநகர காவல் துறையின் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயமுத்தூர் ராஜா தெருவில் உள்ள ஸ்ரீ சபரி நகைக்கடை உரிமையாளர் சபரிநாதனை என்பரை 2017 டிசம்பர் மாதம் அணுகிய உதகை லட்சுமி ஜூவல்லரி உரிமையாளர் முகேஷ்குமார் மற்றும் அவரது மூத்த சகோதரர் மகேஷ்குமார் மற்றும் அவர்களது தந்தை சுபாஷ் ஆகியோர் திருமண ஆர்டர் எடுத்துள்ளதாகவும், தங்கம் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்,
image
மேலும் திருமண நிகழ்ச்சி முடிந்ததும் தங்க ஆபரணங்களுக்கான தொகையை செலுத்தி விடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களின் வார்த்தையை நம்பிய சபரிநாதன், 892.55 கிராம் தங்க ஆபரணங்களை மூவரிடமும் கொடுத்துள்ளார், இதைத் தொடர்ந்து அவர்கள் தங்கத்திற்கான தொகையை தராததால், 2018 பிப்ரவரியில் சபரிநாதன் மூவரையும் அணுகியுள்ளார்.
இதையடுத்து மூவரும், 281 கிராம் தங்க ஆபரணங்களை சபரிநாதனிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 611.55 கிராம் தங்க ஆபரணங்களை ஒருவார காலத்திற்குள் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், அவர்கள் ஆபரணங்களுக்கான பணத்தையோ ஆபரணங்களையோ திருப்பித் தராததால் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 409 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
image
இந்த வழக்கை தொடர்ந்து இந்த மூவரால் ஏமாற்றப்பட்ட மேலும் 3 பேர் சிசிபி போலீசில் புகார் அளித்தனர், இந்த நான்கு பேரிடம் இருந்து மட்டும் சுமார் நான்கு கிலோ தங்க ஆபரணங்களை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன் முகேஷ்குமார் மற்றும் அவரது தந்தை சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், மகேஷ்குமார் முன்ஜாமீன் பெற்ற நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து முகேஷ்குமாரும், சுபாஸும் சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள லட்சுமி ஜூவல்லரியில் சோதனை நடத்த போலீஸ் குழு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. இந்நிலையில், நேற்று உதகை வந்த போலீசார், கடையில் நடத்திய சோதனையில் 80 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 42 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் யார் யாரிடம் நகை வாங்கி ஏமாற்றியுள்ளார்கள், நகைகளை திருடி விற்கும் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.