சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கத்திடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்மொழியின் சிறப்பைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக, வரும் கோரிக்கைக்கு ஏற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவ ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி தமிழ் இருக்கை நிறுவும் வகையில் 3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது. இந்நிலையில், 3 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான ரூ.2.50 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.
வ.உ.சி. விருது: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பெயரில், அவரது 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்தாண்டு செப்.3-ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய விருதை முதன்முதலாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எண்ணரசு கருநேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.