அடி மடியில்..கை வைத்த சேகர் பாபு; அரண்டுபோய் கிடக்கும் தீட்சிதர்கள்!

சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி சார்பில், சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார்.

இதன் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா காலத்திற்கு பிறகு, இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எந்த கோவிலில் அனுமதி வழங்கவில்லை என்றாலும் குறைந்த அளவு திருமணங்களை நடத்த இணை ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பணிகள் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளால் கோவில்களில் திருமணம் நிறுத்தப்பட்டு இருந்தாலும் சிறிய அளவில் திருமணங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கோவிலை எடுக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை. இன்னார் இனியவர் என பார்ப்பது இல்லை.

இந்து அறநிலைய துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? என்று தான் பார்க்கிறோம். யாரும் சட்டத்தை மீறி செயல்பட முடியாது. அந்த கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கைகள் முறையாக கணக்கு வைக்கப்படுகிறதா? மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்ட நகைகள், சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றதா? என பார்க்கப்படும்.

சட்ட விதிகளை மீறி செயல்பட்டு இருந்தால் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது. தமிழகத்தில் 48 கோவில்களில் முழு அளவில் அன்னை தமிழில் அர்ச்சனை நடந்து வருகிறது.

மீதம் இருக்கும் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மழை காலங்களில் என்ன நடந்தது? என அனைவருக்குமே தெரியும்.

அதிமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் என்ற முறையில் செயல்பட்டதால் தான் கடும் பாதிப்பு ஏற்பட்டது. நாங்கள் அடுத்த பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம்.

இவ்வாறு இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறி இருப்பது அர்ச்சகர்களில் அடி மடியில் கை வைக்கும் வகையில் உள்ளதால் அரண்டுபோய் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.