நித்தியானந்தா கைலாஸா எனும் இந்து நாடு உருவாக்கி அதற்கு தானே அதிபராகவும் அறிவித்துக் கொண்டார். நித்தியானந்தாவை தேடப்படும் நபராக இந்தியா அறிவித்துள்ளது. தன் சீடர்களுக்கு அவ்வப்பொழுது சமூக ஊடகங்கள் மூலம் தோன்றி அருள் வழங்குவார். இந்த நிலையில் கைலாசாவில் வேலை வாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாச கிளைகளுக்கு தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு தகுதியான நபர்கள் வெளிநாடுகளில் பணியாமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து பல்கலைக்கழகம், கைலாசாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள், கைலாச தகவல் தொழில்நுட்ப பிரிவு, கைலாச அயல்நாட்டு தூதரகம், பிளம்பிங், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வேலையில் சேருவோருக்கு உணவு மருத்துவ வசதி தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலையில் சேர்வதற்கு இறை பக்தி உடையவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், வேலை வாய்ப்பு முகாமை திருவண்ணாமலையில் நேர்காணல் முறையில் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவண்ணாமலையில் எங்கு நடைபெறும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. வேலையில் சேர விரும்புவோர் முழு விவர அல்லது சுய தகுதி குறிப்பை வாட்சப் எண்ணிற்கு அனுப்பினால் நேர்காணல் விவரத்தை உங்களுக்கு தெரிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.
கைலாஸா மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டாலும் நேர்காணல் நடக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. பயிற்சி வழங்கப்படும் இடமும் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கைலாஸா நாட்டில் இருந்து ஹிந்து மத ஆதரவாளர்களுக்கு விருது வழங்கி வந்த நிலையில் தற்பொழுது வேலைவாய்ப்பும் வழங்கி நித்தியானந்தா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.