மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போலவே, நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் ஒவ்வொரு தனி நபர்களின் அறிவும் பெருகும் என்பது திருவள்ளுவரின் கருத்து.
கல்வியிலும் அறிவிலும் மேன்மை பொருந்திய மக்களால் தான் ஒரு சமூகம் சிறந்த விளங்கும் என பண்டையகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் முதல் நவீன அறிவுசார் தலைவர்கள் வரை நமக்கு விளக்கியுள்ளனர். இதனால் தான் எல்லா பிரதேசங்களுக்கும் சென்று அல்லது படையெடுத்து அங்குயிருக்கும் அறிஞர்களிடம் உறவு பாராட்டினர். பாடசாலைகள், நூலகங்களுக்கு தனி கவனம் செலுத்தினர்.
சிறந்த ஆயுத அறிவு தான் என்பதை உணர்ந்து வைத்திருந்தனாலே ஒரு இனத்தை அழிக்க, அவர்களது நூல்கங்களை அழித்து எரித்தனர். இதன் மூலம் நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
தமிழகம் முழுவதும் 12,525 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்படும் எனவும், புதிய புத்தகங்கள், பர்னிச்சர் பொருட்கள் வாங்கப்படும் எனவும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக தமிழக முழுவதும் உள்ள நூலகங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 3,808 நூலங்கள் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களைச் சேர்ந்த 3,808 நூலகங்களுக்கும் ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 55 கோடியே 71 லட்சத்தில் நூலக சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நூலகங்களுக்கு பர்னிச்சர்கள் வாங்க ரூ. 9 கோடியே 52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு நூலகத்துக்கும் தலா ரூ. 51 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ. 19 கோடியே 4 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நூலகங்களுக்கு சென்று படிக்க முடியாதவர்களுக்காக கிராமப்புறங்களில் உள்ள நூலக வசதிகளை உருவாக்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு எடுக்காட்டிற்காக தருமபுரியில் உள்ள ஒரு நூலகத்தின் நிலை குறித்து அதன் வாசகர் கூறுவதை இங்கு பார்க்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் கடத்தூரை சேர்ந்த பொ. இராமலிங்கம் கூறுவது, ‘’நான் இந்த நூலகத்துக்கு சிறுவயது முதல் வந்துகொண்டிருக்கிறேன். கடத்தூர் கிளை நூலகம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படுகிறது. இதை முழு நேர நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். நூலகத்திற்கு சில செய்திதாள் மட்டுமே வாங்கப்படுகிறது. எனவே செய்திதாள்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டும்.
அப்போது தான் பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக கழிப்பறை வசதியை செய்ய வேண்டும். இப்போது அரசு கிராமப்புற நூலங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி வைத்து வேலைகளை உடனடியாக தொடங்கி செய்து முடிக்கப்பட வேண்டும். ” என்றார்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கி முடிப்பதே கொடுப்பது வாசகர்களுக்கும், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
பேட்டி & புகைப்படம் – சரவணன்
இதையும் படியுங்கள் – போலந்தில் விழுந்த ஏவுகணை யாருடையது?.. வெளியானது உண்மை! பூம்ராங் ஆன ஜெலென்ஸ்கி பேச்சுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
