அமராவதி :ஆந்திராவில், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், ரசாயன பொருட்களை மறுசுழற்சி செய்யும் குழாய் வெடித்ததில், அங்கு பணியில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கவுரிபட்டினம் என்ற இடத்தில், தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்கு, ரசாயன பொருட்களை மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்லும் குழாயில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை, பழுதுநீக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக வெப்பம் காரணமாக, அந்த குழாயில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில், துணை மேலாளர், பணிப் பொறுப்பாளர் மற்றும் மருந்தாளுனர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை மற்ற தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.மாவட்ட கலெக்டர் கே.மாதவி லதா, இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ௨௦ லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement