சபரிமலையில் நேற்று நடை திறப்பு மண்டல பூஜை இன்று தொடக்கம்| Dinamalar

சபரிமலை, :சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. 18 படியேறி வந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். இன்று அதிகாலை 3:00 மணிக்கு மண்டல கால பூஜை துவங்கியது.

கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மண்டல காலத்துக்காக, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று மாலை 5:00 மணிக்கு நடை திறந்தார்.

அடுத்து, 18ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், 18 படிகளுக்கு கீழே நின்று கொண்டிருந்த புதிய மேல்சாந்திகள் சபரிமலை ஜெயராமன் நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து வந்து, சன்னதி முன் அவர்களுக்கு திருநீறு வழங்கினார்.

மாலை 6:30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு சன்னதி முன்பு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரிக்கு அபிஷேகம் செய்து அய்யப்பன் மூலமந்திரத்தை சொல்லித் தந்து சன்னதிக்கு அழைத்துச் சென்றார்.

மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் ஹரிகரன் நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி சன்னதிக்குள் அழைத்து சென்றார்.

மண்டலகாலம் துவக்கம்

இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் ஆரம்பமானது. தந்திரி கண்டரரு ராஜீவரரு மண்டலகால நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார்.

நாளை முதல், தினமும் அதிகாலை 4:30 மணி முதல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். இந்த சீசனில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

முதற்கட்டமாக நேற்று 1,300 போலீசார் பொறுப்பேற்றனர். இவர்களுடன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போலீசாரும், மத்திய அதிவிரைவுப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அய்யப்பன் தரிசனத்திற்கு ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக மட்டுமே பக்தர்கள் செல்ல முடியும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு, நிலக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ மையங்கள் உள்ளன. இங்கு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டி பதிவு செய்யலாம்.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் பம்பையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இவர்கள் மதியம் 12:00 மணிக்கு பின், மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. மாலை 6:00 மணிக்கு பலத்த மழை பெய்ததால், தரிசனத்துக்காக காத்து நின்ற பக்தர்களும், மலையேறும் பக்தர்களும் சிரமப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.