புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.750 கோடி மோசடி தொடர்பாக ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.கான்பூரை தலைமையிடமாக கொண்டு ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேனாக்களை உற்பத்தி செய்யும் ரோட்டோமேக் குழும நிறுவனங்களின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஓபி வங்கி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் இயக்குனர்களான சாதனா கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரி மீது கிரிமினல் சதி, மோசடி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ தனது எப்ஐஆரில், ‘கடந்த 2012ம் ஆண்டில் ரோட்டோமேக்கிற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐஓபி) ரூ.500 கோடி கடன் வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஜூன் 30 ம் தேதி இந்த தொகை வாரா கடனாக (என்பிஏ) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கிக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ.750.54 கோடியாக உயர்ந்துள்ளது,’ என குறிப்பிட்டுள்ளது. மேலும், 7 வங்கிகளில் கடன் பெற்று ரோட்டோமேக் திரும்ப செலுத்தாத தொகை ரூ.2,919 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.