சுஜாதாவின் கதையை திரைப்படமாக எடுப்பதன் முக்கியக் காரணம் எது தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என தனி இடம் உண்டு. அவருடைய எழுத்து நடையை எளிதில் பின் தொடரலாம். சுற்றி வளைத்து, நீட்டி முழக்காமல் சொல்ல வருவதை நேரடியாக சொல்வது சுஜாதாவின் ஸ்டைல்.

சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், திரைப்படங்கள் என பல முயற்சிகள் செய்து அதில் வெற்றி கண்டவர் சுஜாதா.

‘தமிழ்ச் சிறுகதை’ எனும் கடலில் எதிர்நீச்சல் போட்டவர்கள் பலர். புதுமைபித்தனில் ஆரம்பித்து சுந்தர ராமசாமி வரை, நிறைய எழுத்தாளர்கள் தங்களது பங்களிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். அவர்களுள் நவீனச் சிறுகதைகளின் சிம்ம சொப்பனமாக மிளிர்கிறார் சுஜாதா.

சுஜாதா தனது வாழ்நாளில் மூன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது பெரும்பாலான சிறுகதைகளில், தான் பார்த்த கேட்ட சம்பவங்களையே உட்புகுத்தியிருக்கிறார். ஒரு நல்ல சிறுகதைக்கு இது மிகவும் அவசியம் என்கிறார் சுஜாதா.

சுஜாதா

எப்போதோ நான் வாசித்த ‘நகரம்’ சிறுகதை, இன்றும் என் நினைவில் உள்ளது. மாபெரும் தாக்கத்தை உண்டாக்கிய சிறுகதை அது.

மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெறும் சம்பவங்களாக கதை நகரும். மூளைக்காய்ச்சல் பாதித்த மகளுக்கு சிகிச்சை வேண்டி, அவசரப் பிரிவுக்கு வருவாள் வள்ளியம்மாள். அவளிடம் ‘அட்மிட் சீட்டு’ வாங்கச் சொல்லி அங்கும் இங்கும் அலைய வைப்பார்கள் மருத்துவ ஊழியர்கள். கடைசியில், சீட்டு வாங்க வேண்டிய இடம் தெரியாமல் மகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்துவிடுவாள் வள்ளியம்மாள். மகளுக்கு சரியாகி விட்டால், வைதீஸ்வரன் கோயிலுக்கு காணிக்கை செலுத்துவதாக கதை முடியும்.

படிப்பறிவு இல்லாத ஒரு ஏழைத்தாய் சந்திக்கும் இடர்பாடுகளை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருப்பார் சுஜாதா. R.P. சுவாமிநாதன் என்பவர், மிக நேர்த்தியாக இக்கதையை ஒரு குறும்படமாக இயக்கியுள்ளார். YouTube, ThreeF Channel ல் இக்குறும்படத்தைக் காணலாம்.

இச்சிறுகதையை வாசித்த பின்பு, அவருடைய மற்ற சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதைத் தொடர்ந்து சுஜாதாவின் மற்ற எல்லா சிறுகதைகளையும் வாசித்து முடித்தேன்.

சுஜாதா, தனது கதாபாத்திரங்களின் மூலம் மனிதர்களுடைய உளவியலை வெளிக் கொண்டு வருகிறார். மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதல் அவருக்கு இருக்கிறது. அவருடைய கதைகளில் வரும் மனிதர்கள், அந்தந்த நேரத்திற்கு எது நியாயமோ அதைச் செய்கிறார்கள். சூழ்நிலையை முன் வைத்து பல முடிவுகளை எடுக்கிறார்கள். நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஏனைய கதைகளின் நாயகர்கள்,’மிடில் க்ளாஸ்’ மாதவன்களாக இருக்கிறார்கள்.

மாதக் கடைசியில் கையைக் கடிக்கும் வருமானம், ஸ்கூட்டர் பயணம், அளவுச் சாப்பாடு.

இவர்களுக்குக் கடன் கொடுக்க நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். விதிவிலக்காக,’சில வித்தியாசங்கள்’ கதையில் வரும் ராஜாராமனுக்கு கடன் கொடுக்க யாருமே இல்லை. ஆனாலும் தூரத்துச் சொந்தம் ஒருவரிடம் பணம் வாங்கச் செல்கிறான். அவரோ,’இந்த சொந்தக்காரங்களுக்கு செக் எழுதி கொடுக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு’ என அலுத்துக்கொண்டே செக்கை அவனிடம் நீட்டுகிறார். ராஜாராமன் அதை கிழித்துவிட்டு, வீர வசனங்கள் பேசியபடி வெளியே வருகிறான்.

இதோடு கதை முடித்திருந்தால், அது ஒரு சாதாரணக் கதை. ஆனால் முடிவில், ராஜாராமன் நம்மிடம் இப்படிச் சொல்வதோடு கதை முடியும்.

‘நீங்க இவ்வளவு நேரம் பொறுமையா என் கதைய படிச்சீங்க. கடனா ஒரு முந்நூறு ரூபா தாங்களேன்…!’

சுஜாதா டச்…

அதேப்போல, கதையின் முடிவில் நாம் யூகிக்க முடியா ஒன்றை சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து கண் சிமிட்டுகிறார் சுஜாதா.

‘முரண்’ கதையின் முடிவை வாசித்து அதிர்ந்தேன். ‘வீடு’, ‘ஒரே ஒரு மாலை’, ‘அரங்கேற்றம்’ போன்ற கதைகளின் முடிவும் அப்படித்தான். அரங்கேற்றம் கதையின் முடிவு, என்னைத் தூங்கவிடாமல் செய்தது.

சுஜாதா

இப்போதெல்லாம் Anthology எனப் பெயர் வைத்து, மூன்று நான்கு குறும்படத்தை படத்தை ஒன்றாக ஒட்டுகிறார்கள்.

ஆனால்,1972 ஆம் ஆண்டே ‘சென்ற வாரம்’ என்ற கதையில் அதைச் செய்திருக்கிறார் சுஜாதா. இப்படிச் சிறுகதைகளில் நிறைய புதுமைகளை கையாண்டவர் அவர்.

இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும்போது, ஒரு திரைப் படத்திற்கு உண்டான மொழியிலேயே அவரது வர்ணிப்புகள் இருக்கும். இன்று நிறைய இயக்குநர்கள், சுஜாதாவின் கதையை திரைப்படமாக எடுப்பதன் முக்கியக் காரணம் இது தான்.

காதல் உணர்வுகளை அள்ளித் தெளிக்கும் கதைகளின் நடுவே, காம உணர்வுகளையும் வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு விதமாக கையாண்டிருக்கிறார் சுஜாதா.

எழுத்தாளர்களுக்குப் பிடித்தப் பகுதியான வேசைகள் பற்றியக் கதைகளையும் அவர் விடவில்லை. ‘எப்படியும் வாழலாம்’ என்ற கதையில், சுஜாதா ஒரு வேசையை பேட்டிக் காண செல்வார். அங்கே இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடல்கள் தான் கதை.

‘இந்தத் தொழில் எதுக்கு வந்த? இது பாவமா தெரியலையா?’

‘அப்ப இங்க வந்துட்டுப் போற ஆளுங்க பாவத்தையெல்லாம் எதுல கொண்டு போயி சேக்குறது?’

எப்படியும் வாழலாம் – சிறந்த தலைப்பு.

நிறைய கதைகளில், தான் வெளியூருக்கு பயணம் செய்த அனுபவங்களைக் கதையாக சொல்கிறார். அவற்றுள், ‘நயாகரா’ மற்றும் ‘பிரயாணி’ கதைகள் முக்கியமானவை. பெரும்பாலும் விமானப் பயணத்தையே முன் வைத்து எழுதியிருக்கிறார். ‘பார்வை’ என்ற ஒரு கதையில் மட்டும் ரயில்வே ஸ்டேஷன் வருகிறது.

பெண்களுக்குத் தன் கதைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அவருடைய பெண்கள் வேலைக்குச் செல்பவர்கள். எதையும் ஒளிவு மறைவின்றி, நேரடியாக பேசக் கூடியவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். நேர்மையானவர்கள். ‘நெருப்பு’ கதையில் வரும் பவித்ரா நல்ல உதாரணம்.

ஒரு பேட்டியில்,’நல்ல சிறுகதை என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு சுஜாதா இப்படி பதிலளித்திருப்பார்.

‘சிறுகதையின் முடிவில், அதன் ஆரம்பம் இருக்கவேண்டும்…’

சுஜாதாவின் ஒவ்வொரு கதைகளிலும் இது சாத்தியமாகியிருக்கிறது.

சுஜாதாவின் அந்தக் கடைசி வரிகள், பல ஆச்சர்யங்களை ஒளித்து வைத்திருக்கின்றன.

சுஜாதாவின் சிறுகதைகளில் சிறந்தவை என வகைப்படுத்துதல் மிக மிகக் கடினம்.

நகரம், எப்படியும் வாழலாம், அரங்கேற்றம், குதிரை, ராணி, வழி தெரியவில்லை, ஒரு லட்சம் புத்தகங்கள், முதல் மனைவி, வீணா, ரயில் புன்னகை, அரை வைத்தியன், முழு வைத்தியன், ஆக்கிரமிப்பு முதலிய சிறுகதைகள், சுஜாதாவின் சிறுகதைளில் முத்துக்கள்.

‘தம்பி…இந்த நம்பர் எந்த இடம்பா?’ என மருத்துவமனையில் அன்றாடம் என்னை நிறுத்தி வழி கேட்பவர்கள் பலர். இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு சரியான வழியை காண்பித்த பின்பு தான் அந்த இடத்தை விட்டு நகர்வேன்.

‘நகரம்’ உண்டாக்கிய பாதிப்பு அது.

இப்படி, சுஜாதாவின் ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பாதிப்பை உண்டாக்குவது நிஜம்.

-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.