மதுரை: கோயில் அறங்காவலர் பதவிக்கு எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்று தாக்கல் செய்யக்கோரிய வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களுக்கான அறங்காவலர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் சம்பந்தப்பட்ட கோயிலின் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்தவர் என்பதற்காக ஆதீனங்கள் மற்றும் குருபீடங்களில் சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்கள் போலியென தெரியவந்தால் அறங்காவலர் பதவியை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.1க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.