Delhi Shraddha Murder : 'ஆம்பள புத்திதான் காரணம்' – மத்திய அமைச்சரை தாக்கும் பெண் எழுத்தாளர்!

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் சமீபத்தில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, அந்த கொலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் புதைத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, 18 நாள்கள் இரவு 2 மணிக்கு பின் வீட்டில் இருந்து புறப்பட்டு அவற்றை புதைத்துள்ளார். 

அந்த பெண்ணின் உடல் பாகங்களை பதுக்க புதிய 30 லிட்டர் பிரிட்ஜ், வீடு முழுக்க வாசனை ஊதுபத்திகள், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடல் பாகங்களை அப்புறப்படுத்தவும் கூகுளில் தேடியது, அவரின் கொலைக்கு உதவியாக இருந்த ஆங்கில வெப்-சீரிஸ், பெண்ணின் உடல் பாகங்கள் வீட்டில் இருந்தபோதே மற்றொரு பெண்ணை வீட்டு அழைத்து வந்தது என பல திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. 

‘பிரச்சனையே ஆண்கள் தான்’

போலீசார் இந்த அந்த பெண்ணின் உறுப்புகளை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துள்ளதால், போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், பிரபல எழுத்தாளரும், அடிப்படைவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்ததால் வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவருமான தஸ்லிமா நஸ்ரின் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதாவது, இதுபோன்ற கொலைகளுக்கு ஆணாதிக்க சிந்தனைதான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில்,”லிவ்-இன் உறவில், ஒரு ஆண் தனது காதலியை கொலை செய்துவிட்டால், உடனே லிவ்-இன் உறவால் குற்றங்கள் ஏற்படுகிறது. பெண்கள் லிவ்-இன் உறவுக்குள் போகாதீர்கள், திருமணம் செய்யுங்கள் என்பீர்கள். அதுவே, திருமணசெய்துகொண்ட ஜோடியில், மனைவியை ஒரு கணவர் கொன்றுவிட்டால், திருமணத்தால் குற்றங்கள் ஏற்படுகிறது என்று லிவ்-இன் உறவுக்கு அனுமதிப்பீர்களா?. இங்கு லிவ்-இன் உறவோ அல்லது திருமணமோ பிரச்சனை இல்லை, ஆண்களின் மனோபாவம்தான் தலையாய பிரச்சனை” எனக் குறிப்பிட்டார். 

முன்னதாக, டெல்லி பெண் கொலை குறித்து மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோர் கூறுகையில்,”படித்த பெண்கள், தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை கைவிட்டு, லிவ்-இன் உறவில் இருப்பதால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது. 

இதற்கு அவர்களும் பொறுப்பு. அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி லிவ்-இன் உறவில் இருக்க வேண்டும் என்றால், அதற்கு என உரிய பதிவுமுறையை கொண்டுவர வேண்டும். பெற்றோர்களுக்கு இதுபோன்று உறவில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்றார். 

பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடுவதா?

இதனையடுத்து, கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மீதும், பாதிக்கப்படுவோரின் மீது குற்றத்தின் பொறுப்பை சுமத்துவது கண்டிக்கத்தக்கது என மத்திய அமைச்சருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மனசாட்சியின்றி, மிகக்கொடூரமாக, கொலைசெய்யப்பட்ட மீது பழிபோடும் மத்திய அமைச்சரை, பிரதமர் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என சிவசேனா தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி போர்கொடி தூக்கியுள்ளார். இதன் அடிப்படையிலேயே, எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.