3 மாதத்தில் 3வது சம்பவம்: ஒரே அறையில் இரு கழிப்பறை கட்டிய கூடலூர் நெல்லியாளம் நகராட்சி….

நீலகிரி: ஒரே அறையில் இரு கழிப்பறைகள் கட்டப்படுவது தமிழ்நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே இரு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது 3வது இடத்தில் இதுபோன்று ஒரே அறையில் இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது இது கடுமையான விமர்சனங்களுடன் அந்த பகுதி பொதுமக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

கோவை மாநகராட்சி, 66வது வார்டு, அம்மன் குளம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரே அறையில் இரு கழிப்பறை கட்டப்பட்ட சம்பவம் கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தியது. மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் மெத்தனம் காரணமாக இந்தசம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.  பின்னர் அது மாற்றி அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவின்  புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த கட்டிடத்திலும்,  ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இ. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மற்றும்  அதிகாரிகளின் மெத்தனம் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டது. பின்னர் அதற்க சால்ஜாப்பு கூறி, மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் ஒரே அறையில் இரு கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சியுடம் புகார் அளித்தனர்.  இதுவும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அதையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளில் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டு கழிவறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது.   பணி முடிந்ததால் அந்த பகுதியினர் ஆர்வத்துடன் கழிப்பறையை காண சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. கதவு எதுவும் இன்றி 2 கழிப்பிடத்துக்கு மத்தியில் சிறு தடுப்புச்சுவர் மட்டும் அமைக்கப் பட்டு உள்ளது. இதனை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. முறையான திட்டமிடுதல் இன்றி மத்திய அரசின் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஒரே இடத்தில் 2 கழிப்பிடம் கட்டிய காண்டிராக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். எதிர்ப்பு காரணமாக கழிப்பிடத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் நெல்லியாளம் நகராட்சி ஈடுபட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே அறையில் இரு கழிப்பறை அமைப்பது 3வது முறையாக தொடர்ந்துள்ளது, கடந்த 3 மாதங்களில் 3வது சம்பவமாக இது நடைபெற்றுள்ளது. இந்த சம்பவங்கள், மாநில அரசுக்கு கடுமையான தர்மசங்கடத்தை உருவாக்கி உள்ளது.  பதவியில் இருந்து நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள், கண்டு கொள்ளாததும், அதிகாரிகளின் மெத்தனம் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதற்கு தமிழகஅரசு எப்போது முடிவு கட்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே தொடர்கிறது.

சர்ச்சை எதிரொலி: தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது காஞ்சிபுரம் அரசு அலுவலக இரட்டை கழிப்பறை…

ஒரே அறையில் இரு கழிப்பறை: விமர்சனங்களைத் தொடர்ந்து சிறுநீர் கழிப்பிடமாக மாற்றியது கோவை மாநகராட்சி…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.