அதிரிபுதிரி வெற்றி கொடுத்த ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, படு சுறுசுறுப்பாகிவிட்டார் கமல். அடுத்து ‘இந்தியன் 2’, ‘பிக்பாஸ்’ படப்பிடிப்புகளில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார்.
அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படங்களின் ஷெட்யூல்களையும் மும்முரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்படியொன சூழலில் ரவுண்ட் கட்டும் கமலின் அடுத்தடுத்த லைன் அப்களை விசாரித்தோம்.
‘விக்ரம்’ படத்தை அடுத்து மல்டி ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கமல். அந்த ஆர்வத்தை ‘பொன்னியின் செல்வன்’ படமும் தூண்டி விட்டிருக்கிறது. கமலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்கப்பட்ட மணிரத்னம் – கமல் கூட்டணியின் படமும் மல்டி ஸ்டார் படம்தான் என்கிறார்கள்.

கமல், இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறார் என பேச்சு இருந்தது. மகேஷ் சொன்ன கதை, கமலை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருக்கிறது. அதன் ஸ்கிரிப்ட் ஒர்க் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும் போதுதான், கமல் அடுத்து சமகால டிரெண்டிங் இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்க ஆரம்பித்தார். அதில் வெற்றிமாறன், ஹெச்.வினோத், பா.ரஞ்சித், முத்தையா, ஆகியோர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். அவர்கள் அத்தனை பேர் சொன்ன ஒன்லைன்களும் வேறுவேறு ஜானர்களில் இருக்கவே, அத்தனையும் கமலை இம்ப்ரஸ் செய்துவிட்டது. ‘பொன்னியின் செல்வன்’ வாய்ஸ் ஓவர் பேசின பந்தத்தில் மணிரத்னமும் அடுத்து கமலுடன் கைக்கோர்ப்பது உறுதியானது.
கமலின் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு நிறைவடைய ஏப்ரல் வரை ஆகலாம் என்கிறார்கள். அதனை முடித்துவிட்டு ஹெச்.வினோத் படத்தை துவங்குவதா அல்லது மகேஷ் நாராயணன் படத்திற்கு செல்லலாமா என்பது குறித்து விவாதித்து வருகிறார் கமல் என்கிறார்கள். அனேகமாக மணிரத்னம் – கமல் இணையும் படத்தின் ஷூட்டிங் 2024ல் தான் இருக்கும் என்ற பேச்சும் இருக்கிறது. இதற்கிடையே கமல் எப்போது கூப்பிட்டாலும் அவரை இயக்க ரெடியாக இருக்கிறேன் என லோகேஷும் ஒரு பக்கம் தயாராக இருக்கிறார். விக்ரமின் ‘தங்கலான்’ படத்தை முடித்துவிட்டு, கமலுக்கு ரெடியாகிவிடுவார் பா.ரஞ்சித் என்கிறது அவரது வட்டாரம். ஆக, கமல் இப்போ படுபிஸி.

இதற்கிடையே அவரது ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமி படமும், உதயநிதி நடிக்கும் படமும் இருக்கிறது. சிவா இப்போது ‘மாவீரன்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதனை முடித்த பிறகே ராஜ்குமார் பெரியசாமியின் படத்திற்குள் வருகிறார். உதயநிதி இப்போது ‘கலகத் தலைவன்’, மாமன்னன் படங்களை முடித்துவிட்டதால், அடுத்து கமல் தயாரிப்பில் தான் நடிப்பார் என்ற பேச்சும் இருக்கிறது.