புதுடெல்லி: மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கவுதம் நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்ற என்.ஐ.ஏ-வின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாவோயிச அமைப்புடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மகாராஷ்ட்ராவின் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா, தன்னை வீட்டுச் சிறையில் வைக்க அனுமதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, 70 வயதாகும் கவுதம் நவ்லகாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிடுவதாக கடந்த 10-ம் தேதி தெரிவித்தனர். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரை வீட்டுச் சிறையில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தான் இன்னமும் சிறையில்தான் இருப்பதாகவும், வீட்டுச் சிறைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கவுதம் நவ்லகா முறையிட்டார். அதேநேரத்தில், நவ்லகாவிற்கு வழங்கப்பட்ட வீட்டுச் சிறைவாச உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நவ்லகாவின் வயதை ஒத்த பலர் சிறையில் இருக்கும்போது, அவருக்கு மட்டும் நீதிமன்றம் ஏன் சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார். மாவோயிச அமைப்பு மட்டுமின்றி ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடனும், ஐஎஸ்ஐ அமைப்புடனும் நவ்லகாவிற்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, நவ்லகாவை வீட்டுச் சிறையில் வைக்க முடிவாகி உள்ள இடம் விஷயத்தில் நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த இடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். மேலும், அந்த இடத்தில் அவரை கண்காணிப்பது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.
நவ்லகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், வீட்டுச் சிறைக்கான இடம் பயன்பாட்டில் இல்லாத காலியான இடம் என்றும், இதில் ஒரு சமையல் அறையும் ஒரு குளியலறையும் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் யாரும் வரக்கூடிய இடம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், என்.ஐ.ஏ-வின் கோரிக்கையை நிராகரித்தனர். அதேநேரத்தில் வீட்டுச் சிறைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தனர். முன்னதாக, கடந்த 10-ம் தேதி விதித்த தீர்ப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிபதிகள் விதித்திருந்தனர். நவ்லகா தனது வீட்டில் இணையதள இணைப்பு வைத்திருக்கக் கூடாது, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு தொடர்பு சாதனங்களை வைத்திருக்கக் கூடாது, போலீசார் அளிக்கும் தொலைபேசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் ஒரு நாளைக்கு 10 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் பேச வேண்டும், போலீசாரின் முன்னிலையில் மட்டுமே பேச வேண்டும், அவரை அவரது மகள் மற்றம் சகோதரி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 3 மணி நேரம் சந்திக்க அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
மேலும், தொலைக்காட்சி, செய்தித்தாள், புத்தகங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்துள்ள நீதிபதிகள், கவுதம் நவ்லகாவின் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த உத்தரவிட்டனர். மேலும், நவ்கலாகவின் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படும் காவலருக்காக அவர் ரூ.2.4 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.