பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், கஞ்சா போதையில் மாணவியரை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை, விக்னேஷ் என்ற மாணவர் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பள்ளியில், 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர்.
‘கஞ்சா வேட்டை 1, 2’ என்றெல்லாம், சினிமா பாணியில் பெயர் வைத்து போலீசார் எடுத்த நடவடிக்கை எதுவும் பயன் தரவில்லையா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறிக்கை:
அ.தி.மு.க., தலைமையில் வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்றால், பிரிந்திருக்கும் தலைவர்கள் இணைய வேண்டும். இவர்களாக இணையப் போகின்றனரா… இல்லை இவர்களை இணைத்து, பா.ஜ., ஒரு மெகா கூட்டணியை உருவாக்கப் போகிறதா? பிரிந்தவர்கள் இணைவது எதிர்காலத்திற்கு நல்லது என்பது, அடிமட்டத் தொண்டர்களின் கருத்து.
தொண்டர்களின் கருத்துக்கு காது கொடுத்திருந்தால், அ.தி.மு.க.,வில் அமளியே வந்திருக்காதே!
பன்னீர் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
அ.தி.மு.க.,வை பிளந்து, தமிழகத்தில் பா.ஜ., வெற்றி வாய்ப்பை தடுப்பதற்கு துணை போனால் தான், தன் மீதான, உறவினர்கள் மீதான வழக்குகள் மற்றும் வில்லங்கங்களில் இருந்து, தி.மு.க., உதவியுடன் விடுபட முடியும் என, பழனிசாமி புது கணக்கு போடுகிறார்.
பன்னீர்செல்வம் கூட ஆளுங்கட்சியை ஆக்ரோஷமாக எதிர்க்காமல், அடக்கி வாசிப்பதன் பின்னணியிலும், இதே மாதிரி கணக்கு இருக்கிறதா என்ன?
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை:
மக்கள், தொண்டர்கள் மனங்களை வென்று ஒற்றைத் தலைமையாக பழனிசாமி ஆவார். இது நடந்து விட்டால், தி.மு.க.,வின் முடிவு உறுதி என்பதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, 16 மாதங்கள் கடந்து தனி நபர் தொடுக்கும் வழக்கில், அவர் மீது ஊழல் பட்டம் கட்டி முடிவுரை எழுத தி.மு.க., நினைக்கிறது.
உங்க கட்சிக்கு முடிவுரை எழுத, தி.மு.க., மெனக்கெட தேவையே இல்லை… அதை, உங்க தலைவர்களே பார்த்துக்குவாங்க!
பா.ஜ., அறிவுசார் பிரிவு முன்னாள் தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
காலையில் இருந்து இரவு வரை, தொடர்ந்து ஒலிபெருக்கி வைத்து, பொருள் வியாபாரம் செய்யும் தெரு வணிகர்களின் உபத்திரவம் அதிகமாக உள்ளது. உடல் நலிவுற்றோர், படிக்கும் சிறார்கள், துாங்கும் பச்சிளம் குழந்தைகள், இன்னும் பலர் பல வித துன்பத்தில் தள்ளப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு ஒவ்வொரு தெருவுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே இதற்கான அனுமதியை வழங்கி, அவர்கள் வண்டியில் ஒட்ட ஆணையிட வேண்டும்.

கொரோனாவால் கிட்டிய கேடுகளில் இதுவும் ஒன்று… இந்த விஷயத்தில் மாநில அரசு உருப்படியான நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்