பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை வெளியுலகிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வட கொரியா ஹ்வாஸாங் 17 என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. அதற்கு முன்னதாக ஏவுகணை தளத்தில் நடந்த சோதனையின்போது அதிபர் கிம் உடன் மகளும் இருந்துள்ளார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்காவின் ஸ்டிம்சன் சென்டரின் வட கொரிய தலைமை தொடர்பான நிபுணர் மைக்கேல் மேடன், “ஒரு பொது நிகழ்ச்சியில் மகளுடன் அதிபர் கிம் கலந்து கொள்வது இதுவே முதன்முறை. இது முக்கியத்துவம் வாய்ந்தது. கிம் தனது மகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்த இத்தகைய தருணத்தை தேர்வு செய்துள்ளது ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.
கிம் ஜோங் உன்னுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும். அதில் இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேசிய விழாவின் போது கிம்மின் ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியானதாக சில உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் அவர் தனது மகளின் புகைப்படத்தை அதிகாரபூர்வமாக வெளியிடுவது இதுவே முதன்முறை.
2013ல் ஓய்வு பெற்ற அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திர வீரர் டெனிஸ் ரோட்மென் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் வட கொரியாவுக்கு சென்ற போது கிம் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்ததாகவும். கிம்மின் மகள் ஜூ அய்யை தான் தூக்கியதாகவும் தெரிவித்தார்.
இதனை சுட்டிக்காட்டு மேடன், “ஜூ அய்க்கு இப்போது 12 அல்லது 13 வயது இருக்கும். இன்னும் 4, 5 வருடங்களில் அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வார். பின்னர் அவர் ராணுவ சேவையில் ஈடுபடுவார் என்று மேடன் கணித்துள்ளார். நடப்பவற்றை கவனிக்கும் போது ஜூ அய், பல்கலைக்கழக படிப்பிற்குப் பின்னர் ராணுவப் பயிற்சியை முடித்து தலைமைப் பொறுப்பிற்கு வரலாம். இல்லாவிட்டால் அவர் அவரது அத்தை ( கிம்மின் சகோதரி) போல் திரை மறைவில் இருந்து அரசியலில் ஈடுபடலாம்” என்று கூறுகிறார்.
வட கொரிய அரசு இதுவரை கிம் ஜோங் உன்னின் அரசியல் வாரிசு யார் என்பது பற்றி எதுவும் சொன்னதில்லை. அவருடைய குழந்தைகள் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லாதிருந்த நிலையில் அவரது சகோதரியோ அல்லது நம்பிக்கைக்குரிய தளபதிகள் யாராவது தலைமை ஏற்கலாம் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மகளை கிம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிம்மின் மனைவி ரிம் சொல் ஜூவும் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று வட கொரிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.