ஜவ்வரிசி, ஸ்பினாச், மசாலா, கம்பு… கிச்சடி ஸ்பெஷல் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பது முதல் அவசரத்துக்குப் பசியாறுவதுவரை கைகொடுப்பது கிச்சடி என்னும் எளிய உணவுதான். நாமெல்லாம் ரவையில் தயாரிக்கும் கிச்சடியை, வட மாநிலங்களில் அரிசி, பருப்பு வைத்து விதம் விதமாகச் செய்வார்கள். இந்த வார வீக் எண்டை கிச்சடி ஸ்பெஷலாக மாற்ற ரெடியா?

சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி

தேவையானவை:

ஜவ்வரிசி – ஒரு கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)

வேகவைத்த பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு

வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – கைப்பிடி அளவு

கேரட் துண்டுகள் – கைப்பிடி அளவு

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 3 (இரண்டாகக் கீறவும்)

எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க:

நெய் – 3 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

மிளகு – கால் டீஸ்பூன்

அலங்கரிக்க:

வறுத்த வேர்க்கடலை – 5 டீஸ்பூன்

மாதுளை முத்துகள் – சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

நெய்யில் வறுத்த முந்திரி – 10

சாபுதானா ஜவ்வரிசி கிச்சடி

செய்முறை:

ஜவ்வரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

பிறகு உப்பு, உருளைக்கிழங்கு, கேரட், பச்சைப் பட்டாணி, ஸ்வீட் கார்ன் முத்துகள் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை மேலே தூவிப் பரிமாறவும்.

ஸ்பினச் கிச்சடி

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

பாசிப்பருப்பு – கால் கப்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

பூண்டு – 4 பற்கள் (பொடியாக நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பாலக் ப்யூரி செய்ய:

பாலக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்)

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

உப்பு – 2 சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்

லவங்கம் – ஒன்று

பட்டை – ஒரு சிறிய துண்டு

ஏலக்காய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

பொரித்த அப்பளம் – 2 (சிறிய துகள்களாக உடைக்கவும்)

ஸ்பினச் கிச்சடி

செய்முறை:

பாலக் ப்யூரி செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் நெய்விட்டு உருக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாலக் ப்யூரி, உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். அதனுடன் வேகவைத்த அரிசி – பருப்பு கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை மேலே தூவி சூடாகப் பரிமாறவும்.

மசாலா கிச்சடி

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

பாசிப்பருப்பு – அரை கப்

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கவும்)

வேகவைத்த பச்சைப் பட்டாணி – 5 டீஸ்பூன்

பீன்ஸ் – 10 (ஒரு இஞ்ச் துண்டுகளாக்கவும்)

கேரட் – ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்)

பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

நெய் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

காய்ந்த மிளகாய் – 2

கிராம்பு – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

அலங்கரிக்க:

நெய்யில் வறுத்த முந்திரி – 10

வறுத்த வேர்க்கடலை – 5 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மசாலா கிச்சடி

செய்முறை:

குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், கேரட், பீன்ஸ், 4 கப் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு, மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, வேகவைத்த அரிசி – பருப்பு கலவை சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு மூடி போட்டு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களை மேலே தூவி, சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

கம்பு கிச்சடி

தேவையானவை:

கம்பு – ஒரு கப்

பச்சைப் பயறு – அரை கப்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 4 கப்

உப்பு – தேவையான அளவு

தாளித்து அலங்கரிக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கம்பு கிச்சடி

செய்முறை:

கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும். பச்சைப் பயறைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். கம்பை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த கம்பு, பச்சைப் பயறைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். கிச்சடி தயார். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து கிச்சடியின் மேலே சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.