சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சீக்ரெட் கோடாக பழைய இரண்டு ரூபாய் நோட்டுகளுடன் ஐம்பொன் சிலைகளை கைமாற்ற காத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும் விதமாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்ததை கண்டு, அவர்கள் அருகில் சென்றனர். போலீசார் தங்களை நெருங்குவதை கண்டவுடன் இரண்டு பேரில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, மற்றொரு நபரை மடக்கிப்பிடித்த போலீசார் அவர் கையில் உள்ள பையை சோதனை செய்தனர். அதில், ஐம்பொன் சிலையும், 300 கிராம் எடை கொண்ட பெருமாள் சிலையும் இருப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெயர் சுதாகர் என்பதும், மற்றொரு நபர் தினேஷ் என்பதும் தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், சிலைகளை கொடுத்து தங்களை சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீக்ரெட் கோடாக பழைய இரண்டு ரூபாய் நோட்டை காண்பித்தால், ஒரு நபர் வந்து தங்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து சிலைகளை பெற்றுக் கொள்வார் என்பதும் தெரியவந்தது. பின்னர், தப்பியோடிய நபர் குறித்தும், சிலைகளின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.