சுரேந்திரநகர் : ”ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டவர்கள், மீண்டும் அரியணை ஏறும் ஆசையில் பாதயாத்திரை செல்கின்றனர்,” என, காங்., முன்னாள் தலைவர் ராகுலை கிண்டல் செய்து பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
குஜராத்தில் முதல்வர்பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., ௧ மற்றும் ௫ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, சுரேந்திரநகரில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியதாவது:
நம் நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில், ௮௦ சதவீதம் குஜராத்தில் நடக்கிறது. நம் உப்பை சாப்பிட்டவர்கள், குஜராத்துக்கு எதிராக அவதுாறாக பேசி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டவர்கள், மீண்டும் அரியணை ஏறும் முயற்சியில் பாதயாத்திரை செல்கின்றனர்.
அதுவும் யாருடன் நடக்கின்றனர்? குஜராத்தில் நர்மதை அணை கட்டப்படுவதை, ௪௦ ஆண்டுகளாக தடுத்தவர்களுடன்.
நர்மதை அணை திட்டத்தை தடுத்தவர்களை குஜராத் மக்கள் தண்டிப்பர். இதற்கு முன் என்னை பல வகையில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
இழிவான மனிதர், மரணத்தின் துாதர் என, பல வகையில் விமர்சித்தனர். வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசாமல் தற்போது எனக்கு என்னுடைய அந்தஸ்தை காட்டுவதாக கூறியுள்ளனர்.
மோடிக்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த அந்தஸ்தும் இல்லை. மக்களின் சேவகன் என்பது மட்டுமே என் அந்தஸ்து.
இவ்வாறு அவர் பேசினார்.
71 ஆயிரம் பேருக்கு வேலை
நாடு முழுதும் அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களில் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி, ௧௦ லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.கடந்த அக்., மாதம், ௭௫ ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.இந்நிலையில், மேலும் ௭௧ ஆயிரம் பேருக்கு வேலைக்கான உத்தரவுகள் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன; பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவக்கி வைக்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தைத் தவிர்த்து, நாடு முழுதும், ௪௫ இடங்களில் இந்தப் பணி உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்