புதுடெல்லி: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக கட்சித் தொண்டர்களை நேற்று சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற கார்கே, 26-ம் தேதி கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, “என்னைப் பொருத்தவரை கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் சரிசமம்தான். கட்சியை பலப்படுத்துவதற்காக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை நேற்று சந்தித்தார். கட்சி அலுவலகத்துக்கு வெளியே நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக கார்கேவை சந்தித்தனர்.