சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த மாதம் 19ஆம் தேதியன்று விதி-110ன் கீழ் தமிழ்நாட்டில் நகர்ப்புரங்களில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்குப் பின் மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள சாலைகள் மேம்படுத்தப்படும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக்குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ.7,338 கோடி மதிப்பில் 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனடிப்படையில், வருகிற 4 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடி வழங்கி, இதர திட்டநிதிகளை ஒருங்கிணைத்து, மொத்தம் ரூ.9,588 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 20,990 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன், முதற்கட்டமாக வரும் 2023 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.5,140 கோடி மதிப்பீட்டில் 12,061 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 1,680 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.1,171 கோடி மதிப்பீட்டிலும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 7,116 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 2,535 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சிகளில் 3,265 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ. 1,434 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும் எனவும், மீதமுள்ள சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் அனைத்தும் தரமானதாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் சாலைகளின் மேற்தளத்தினை முறையாக வெட்டி எடுத்து (milling) புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாலைகள் அமைக்கப்படுவதற்கான ஒருங்கிணைப்பு அமைப்பாக (Nodal Agency) தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) நியமிக்கப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இந்நிறுவனத்தால் இறுதி செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.