சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவ.27-ம் தேதி வரைமிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய மேற்கு மற்றும் அதனைஒட்டிய தென்மேற்கு வங்கக் கட லில் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, நேற்று காலை முதல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நவ.24 (இன்று) முதல் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழைபெய்யக் கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 3 செமீ மழை பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.