கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இந்நிலையில் மணிகண்டன் தன்னுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து வந்ததாகவும், அதன் காரணமாக தான் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து கர்ப்பத்தை கலைத்ததாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் திரைப்பட துணை நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் துணை நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதை தொடர்ந்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மணிகண்டன் தனக்கு சில ஒப்பந்தங்கள் செய்து கொடுத்ததாகவும், ஆனால் அதனை செய்து கொடுக்காமல் வழக்கை நான் வாபஸ் பெற்று, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து தன்னை சந்திக்காமல் தலைமறைவாகி விட்டதாக குற்றம்சாட்டினார் சாந்தினி. மேலும் கடந்த மாதம் 14-ம் தேதி, மணிகண்டன் ராமநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருப்பதாக தகவல் அறிந்து, அவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை வீட்டிற்கு அருகாமையில் விடாமல் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் தடுத்து அடித்ததாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோருக்கு கடிதம் வாயிலாக புகார் அனுப்பியுள்ளார். இது குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்ய ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் தாய் அன்னக்கிளி, அவரின் உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் ஆறுபேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் அமைச்சர் மணிகண்டன் வீட்டில் வேலை பார்த்து வரும் ஜெயவீரகுரு என்பவர் அளித்த புகாரில், `தான் பத்தாண்டுகளாக இங்கு வேலை செய்து வருவதாகவும், கடந்த மாதம் 14ஆம் தேதி துணை நடிகை சாந்தினி காரில் அடியாட்களுடன் வந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்குள் நுழைந்து அவரின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக’ புகார் அளித்தார். இதுதொடர்பாக துணை நடிகை சாந்தினி மீதும் பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை மீண்டும் புகார் அளித்திருப்பது ராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.