Doctor Vikatan: தொடையிடுக்கில் பரவும் கரும்படலம்… குணப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 28, கழுத்து, அக்குள், தொடையிடுக்குப் பகுதிகளில் ஒருவித கறுப்பு படலம் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பார்லரில் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இப்படி ஏற்பட என்ன காரணம்… இதற்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்…

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

இந்தப் பிரச்னை நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கழுத்துப் பகுதியில் மட்டுமன்றி, தொடைப்பகுதி, அக்குள் போன்ற இடங்களிலும் நிறைய பேருக்கு கருமை இருக்கிறது. உடலின் நிறம் ஒன்றாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சருமம் வேறு நிறத்திலும் இருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த சில வருடங்களாகத்தான் இந்தப் பிரச்னை அதிகரித்து வருகிறது. அதற்கு என்ன காரணம், அதை எப்படி சரியாக்கலாம் என்பது பலரின் கவலையாக இருக்கிறது.

கோவிட் தொற்றுக் காலத்தில் பலரது லைஃப்ஸ்டைலும் மாறிவிட்டது. உடலியக்கம் குறைந்துவிட்டது. உடற்பயிற்சிகள் செய்வதில்லை. வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலை பார்க்கிறார்கள். மூன்று வேளைக்கும் ஆன்லைனில் வாங்கிச் சாப்பிடப் பழகிவிட்டார்கள் பலரும். இவையெல்லாம் உடல் பருமனுக்கு காரணமாகியிருக்கின்றன.

உடல் எடை கூடும்போது சருமம் கறுப்பாக மாறும் `பிக்மென்ட்டேஷன்’ பிரச்னையும் வரும். முதல் வேலையாக அதிகப்படியான எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். இரவு 10 மணிக்குத் தூங்க வேண்டும். காலையில் எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும்.

வாழ்வியல் காரணங்கள் தவிர்த்து இந்தப் பிரச்னைக்கு மருத்துவரீதியான காரணங்களும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை மருத்துவ மொழியில் `அகான்தோசிஸ் நைக்ரிகன்ஸ்’ ( Acanthosis nigricans) என்று சொல்வோம். அதாவது சருமத்தில் வெல்வெட் போன்ற கருமை படரும். குறிப்பாக, சருமம் மடியும் இடங்களில் இப்படி இருக்கும். எடை அதிகரிக்கும்போது உடலின் மடிப்புகளில் கொழுப்பு சேர்ந்து, அங்கெல்லாம் கருமை படரும். இது ஒரேநாளில் வருவதில்லை. மெள்ள மெள்ள தீவிரமடையும்.

Thigh Excercise

வியர்வை சேரும் இடங்களில் உடல் துர்நாற்றம் அதிகரிக்கும். மரு வரும். ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்தான் இன்சுலின். அது சரியாகச் சுரக்காத நிலையை ‘இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ என்று சொல்வோம். உடல்பருமன் அதிகமுள்ளோருக்கு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். பிசிஓடி பாதிப்புள்ள பெண்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம். அதன் தொடர்ச்சியாக சருமத்தில் கருமை வரும். கருத்தடை மாத்திரை போன்ற சில மாத்திரைகளை எடுப்போருக்கும் அதன் பக்க விளைவாக இப்படி பிக்மென்ட்டேஷன் பாதிப்பு வரக்கூடும்.

வாழ்வியல் முறையை மாற்றுவதுதான் முக்கியமான தீர்வு. பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். வெளிப்புறத்தில் பூசும் க்ரீம், ஜெல் போன்றவை எல்லாம் தற்காலிக பலனையே தரும். அவற்றை உபயோகிப்பதை நிறுத்தினால் மீண்டும் பிரச்னை தலைதூக்கும்.

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைப் பழச்சாறும், வைட்டமின் ஈ எண்ணெயும் கலந்து கருமை படர்ந்துள்ள பகுதிகளில் தடவி வரலாம். சரும வறட்சி மாறும். ஓட்ஸை பொடித்து, அதில் தயிர், சிட்டிகை பேக்கிங் சோடா, கற்றாழை ஜெல் கலந்து, கருமையான பகுதிகளில் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு குளிக்கலாம்.

தொடை இடுக்கில் உள்ள கருமையைப் போக்க சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். அதன் காரணமாக தொடையில் பருமன் குறையும். அந்தப் பகுதியில் லிக்விட் பாராபினும் தடவலாம்.

Thigh

எலுமிச்சைப்பழச் சாற்றில் சிறிது சர்க்கரையும் சிறிது தேனும் கலந்து எங்கெல்லாம் கருமை படர்ந்திருக்கிறதோ, அங்கு தடவி, லேசாகத் தேய்த்துக் கழுவலாம். கறுப்பு கொண்டைக்கடலையை பாலில் முதல்நாள் இரவே ஊறவைக்கவும். அடுத்தநாள் அதை வெயிலில் காயவைத்து, அத்துடன் கோஷ்டம், கடுக்காய், கார்போக அரிசி, மஞ்சள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். தினமும் குளித்து முடித்த பிறகு இந்த பவுடரை சருமத்தின் கறுப்பான பகுதிகளில் தேய்த்துக் கழுவலாம். இதே பவுடரை முகத்துக்கான பேக் போலவும் பயன்படுத்தலாம்.

இவையெல்லாமே தற்காலிக தீர்வுகள் என்பதால் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டு, கூடவே மேற்குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.