திருச்சி: திருச்சி கட்டவுட் ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி ஐய்யப்பனுக்கு முருங்கைப்பேட்டை காவிரி படித்துறையில் ஆராட்டு நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்திபரவசத்துடன் வழிபட்டு புனிதநீராடினர். திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்றதுமான சுவாமி ஐய்யப்பன் ஆலயத்தின் 38வது ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தது.
முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி மாலை 4மணிக்கு உற்சவ மூர்த்தியான ஐயப்ப சுவாமிக்கு ஸ்ரீவேலி பூஜையும், முருங்கைப்பேட்டை காவிரி படித்துறையில் ஐயப்பசுவாமிக்கு மஞ்சள், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அர்ச்சனை செய்யப்பட்டு அரவணை பாயசம் படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஐயப்ப சுவாமியை தந்திரிகள் காவிரிஆற்றில் இறக்கி மூன்று முறை நீரில் தீர்த்தமாட வைத்து ஆராட்டு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என கோஷமிட்டு தரிசனம் செய்ததுடன், காவிரியில் மூழ்கி நீராடி ஐயப்பனை வழிபட்டனர். இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துக்கொண்டு வழிபட்டனர்.