நாடு முழுவதும் உயரும் பால் விலை.. எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு சதவீதம்? – முழுவிபரம்

நாடு முழுவதும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலில் பால் விலையும் உயர்ந்தால் என்ன செய்வது என பொதுமக்கள் விழிபிதுங்கியுள்ளனர். இந்தியக் குடும்பங்களில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களில் பால் இருப்பதால், இந்த ஆண்டு விலை உயர்வு பல இந்தியக் குடும்பங்கள் வெகுவாக பாதித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பால் கொள்முதல் விலை அதிகரித்ததால், ஆவினில் கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை உயர்ந்தது. இதனை தொடர்ந்து, கேரளாவில் அரசு பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படுகிறது. அந்த மாநில அரசு பால் நிறுவனமான ‘மில்மா’வால் அடுத்த மாதம் டிசம்பர் 1-ம்தேதி முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. ஆந்திராவிலும் பாலின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஏழரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் பால் விலை 7.7% வரை உயர்ந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆவின் விலை ரூ.40, ஆந்திராவில் அரசு விஜயா பால் ரூ.55, மராட்டியத்தில் அமுல் ரூ.51, டெல்லியில் கொழுப்பு சத்து நிறைந்த பாலின் விலை ரூ. 61, குஜராத் அமுல் ரூ.52 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தயிர் விலை 7.6% உயர்ந்துள்ளது.
image
ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். ஆனால் எல்லா மாநிலத்திலும் கணிசமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாநிலங்களில் குறிப்பாக சென்னை, பெங்களூருவில் தான் பால் அதிக விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம், மதர் டெய்ரி டெல்லி(என்சிஆர்) மற்றும் வட இந்தியாவில் உள்ள சில சந்தைகளில் முழு கிரீம் பால் மற்றும் பசும்பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. அக்டோபர் தவிர, மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து வகையான பாலுக்கும் லிட்டருக்கு ரூ.2 அமுல் உயர்த்தியது. மொத்த இந்தியாவை பொறுத்த வரையில் வட மாநில பகுதிகளில் தான் பால் விலை தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கச்சா பால் கொள்முதல் செலவு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என டெல்லி மதர் டெய்ரி தெரிவித்துள்ளது. மேலும், ‘’மாட்டு தீவனத்தின் விலை அதிகரிப்பு மற்றும் பருவமழை பொய்த்து போனது எல்லாம் பால் கொள்முதலில் பிரதிபலிப்பதால் பால் விலையில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பால் கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மறுபக்கம், பதப்படுத்தப்பட்ட பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது.
image
நுகர்வோருக்கு தரமான பாலை உறுதி செய்யும் அதே வேளையில், சரியான ஊதியத்துடன் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் இந்த விலை திருத்தம் உதவும். நுகர்வோர் செலுத்தும் விலையில் 75-80% விலை பால் உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று மதர் டெய்ரி தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வால், பால் உட்கொள்ளும் அளவை குறைத்துள்ளதாகவும் மற்றும் பாலுக்கு பதிலாக மலிவான மாற்று வழிகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சமூக ஊடக தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் செப்டம்பர் மாதம் நடத்திய ஆய்வில் மக்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, பண வீக்கம், விலைவாசி உயர்வின் தாக்கம் மக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்காக தொடக்கபுள்ளி தான், உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய புரத உணவான பாலுக்கு, மாற்று வழி தேட தொடங்கியிருப்பது. ஆட்சியாளர்களுக்கு இதை விட பெரிய அலாரம் இருக்க முடியாது. வருகிற பட்ஜெட் தாக்கலில் சரியான பொருளாதார மீட்பு திட்டங்களை வகுத்தால் மட்டுமே நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியும். 
இதையும் படியுங்கள் – டெல்லி ஜமா மஸ்ஜித்க்குள் பெண்கள் நுழைய குடும்பத்தின் ஓர் ஆண் உடன் வரணும் – திடீர் தடை ஏன்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.