தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000, குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிவாராணம் ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களை தொடங்கும் கோப்புகளில் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார். ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
இந்த திட்டம் முதல் நாளே முதல்வரின் கையெழுத்துடன் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அப்போதும் தொடங்கப்படவில்லை.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் சில நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களை பொறுத்தவரை இந்த திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனரே தவிர இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர்
, “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உரையாற்றினார். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் EAC குழுவுடன் நேற்று நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செய்திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.