ஜெ. சிறை செல்ல காரணமானவர் டிடிவி தினகரன்! சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு காரணமே டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில்,  நாமக்கல் மாவட்டத்தில்  அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அதிமுக  இயக்கம் அழிந்துவிடும், சிதைந்துவிடும் என்று கனவு கண்டவர்கள், அந்த கனவையெல்லாம் தவிடுபொடியானது என்றும்,  சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அந்த துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு இன்பம் தந்த தலைவிதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். தற்போது ஆட்சியில் எப்படி முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்தார்களோ, அதேபோல வழக்கு தொடர்ந்தார்கள். திமுகவால், அதிமுகவை எதிர்க்க முடியாத நிலை வருகின்றபோது அவர்கள் நம் மீது வழக்குப்போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்றுமுதல் இன்றுவரை அதைத்தான் கடைபிடிக்கிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பு, திரானி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கொல்லைப்புறத்தின் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறார்கள். அது நிச்சயமாக ஒருபோதும் நடக்காது என்று கூறியதுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அதிமுக அழைத்தால் கூட்டணியில் இணைந்து திமுகவை வீழ்த்துவோம் என டிடிவி தினகரன் கூறினார். ஆனால், டிடிவியை ஏற்க மாட்டோம் என அதிமுக தலைவர்கள் பகிரங்கமாக கூறினார். இதனால் கடுப்படைந்த டிடிவி தினகரன், எடப்பாடி மீது கடுமையான விமர்சனங்களை சமீப காலமாக முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எடப்படி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான  சி.வி.சண்முகம், மறைந்த முன்னாள் முதல் ஜெயலலிதா சிறை செல்ல டிடிவி தினகரன்தான் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதனால் தான் டிடிவி தினகரன் வீட்டைவிட்டு ஜெயலலிதா விரட்டியடித்தார். அம்மாவுக்கும் துரோகம் செய்தவர். அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை என கடுமையானசாடினார்.

மேலும், டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் ஏமாந்து போனார்கள். எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அதிமுக கட்சியை காப்பாற்றினார். 75 உறுப்பினர்களை பெற்று சாதனை பெற்று இருக்கிறார். தினகரன் நடத்துவது கட்சி அல்ல, கோஷ்டி.

இவ்வாறு  கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.