இருவருக்கான உலகில் குழந்தை இருக்க வேண்டும் என பெரும்பாலான தம்பதிகள் நினைப்பதுண்டு. ஆனால் அனைவருக்கும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அந்த எண்ணம் நிறைவேறுவதில்லை.

அதற்காக பல தம்பதியரும் பலவித மருத்துவச் சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 50 வயதைக் கடந்த தம்பதியினர், குழந்தை பெற்றுக் கொள்வதற்கான இனப்பெருக்க சிகிச்சைக்கு (Assisted Reproductive Technology – ART) அனுமதி அளிக்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அதாவது, இச்சிகிச்சையில் பெண்ணின் கருமுட்டையை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்து, அதில் விந்தணுவைச் செலுத்தி, ஆய்வகத்தில் வைத்துப் பராமரித்து மீண்டும் அப்பெண்ணுக்கோ அல்லது வேறொரு பெண்ணுக்கோ செலுத்தி கரு வளர்க்கப்படும்.
இச்சிகிச்சை முறையை ஒழுங்குபடுத்த `இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம்’ உள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 55 வயதைக் கடந்த ஆண்களும், 50 வயதைக் கடந்த பெண்களும் சிகிச்சையை மேற்கொள்ள முடியாது.

ஆனால், 50 வயதைக் கடந்த தம்பதியினர் சிகிச்சையைத் தொடர அனுமதி அளிக்குமாறு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் `இந்தச் சிகிச்சையை அவர்கள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றனர். மனுதாரரின் மனைவி இருமுறை இச்சிகிச்சை மூலம் கருவுற்றிருக்கிறார். முதல் குழந்தை 6 வயதாக இருந்தபோது நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தது.
இரண்டாவது முறை கருவுற்றபோது, கருக்குழாயிலேயே கரு உருவானதால், அதைக் கலைக்கும் நிலை ஏற்பட்டது. தங்களுடைய சிகிச்சையைத் தொடர முற்பட்டபோது, இச்சட்டம் 2021- ல் இயற்றப்படுகிறது. இவர்களின் வயது வரம்பு காரணமாகச் சிகிச்சை தடுக்கவும் படுகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
இம்மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் நிலையை உணர்ந்து, சிகிச்சையை அவர்கள் விரும்பும் மருத்துவமனையில் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.