‘ஜீன்ஸ் பேன்ட் பட்டன், உள்ளாடையில் தங்கம்’ – திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய தங்கக் கடத்தல் குருவிகள்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக எக்கச்சக்கமாக கடத்தல் தங்கம் இறங்குகிறது. அந்த வகையில், கொழும்பு விமான நிலையத்திலிருந்து ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம்போல திருச்சி விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவர் கொண்டு வந்த லக்கேஜில் இருந்த உள்ளாடையில் 57 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம், 30 கிராம் செயின் வடிவிலான தங்கம் என மொத்தம் ரூ.4,51,911 ரூபாய் மதிப்பிலான 87 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டிருக்கிறது. அதே விமானத்தில் வந்த மற்றொரு பெண் பயணியை சோதனை செய்தபோது அவரிடமிருந்து 135 கிராம் மதிப்புள்ள தங்கக் கட்டி மற்றும் 30 கிராம் மதிப்புள்ள தங்கச் செயின் என ரூ.7,07,895 மதிப்பிலான கடத்தல் தங்கம் இருந்திருக்கிறது. பெண் பயணிகள் இந்த தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாஸ்க்கில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்

இந்நிலையில், நேற்று துபாயிலிருந்து கொழும்பு வழியாக ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில், வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவர் கொண்டு வந்த ஜீன்ஸ் பேன்ட்டில் சாதாரண பட்டனுக்கு பதிலாக, ரூ.2,34,652 ரூபாய் மதிப்பிலான 44 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட பட்டன் இருந்திருக்கிறது. மேலும், ரூ.2,50,000 மதிப்பிலான 14 ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன் இரண்டு பிடிபட்டிருக்கிறது. அதே விமானத்தில் வந்த மற்றொரு ஆண் பயணியை சோதனை செய்தபோது அவரும் ஜீன்ஸ் பேன்ட் பட்டனில் ரூ.2,55,984 மதிப்பிலான 48 கிராம் தங்கத்தையும், முகத்தில் அணியும் மாஸ்க்கில் பட்டை வடிவில் ரூ.58,663 மதிப்பிலான 11 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், ரூ.2,50,000 மதிப்பிலான 14 ப்ரோ மேக்ஸ் மாடல் ஐபோன் இரண்டு பிடிபட்டிருக்கிறது. அதையடுத்து கடத்தல் தங்கம் மற்றும் ஐபோன்களை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அந்த பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் கும்பல்கள் டிஸைன் டிஸைனாக கடத்தி வந்து பிடிபடுவது வாடிக்கையாகிவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.