சென்னை: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதியில் பேரக்ஸ் சாலை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இச்சாலையில் ஏற்கனவே இருமுறை பள்ளம் ஏற்பட்டு அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் அதிக சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதட்டமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இச்சாலையில் 15 அடி ஆழத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அதிகாரிகள் இதை பார்வையிட்டு இதை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரித்த போது கனரக வாகனங்கள் இரவு நேரத்தில் சென்றுள்ளதால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரத்தில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திடீரென முக்கிய சாலையில் ஏற்பட்ட இவ்வளவு பெரிய பள்ளம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.