தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி:
தமிழகத்தில் உள்ள, 5,430 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு, விதிமுறைகள் தொடர்பான மருத்துவ கையேடு வழங்கப்படுகிறது; இது, டாக்டர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தமிழகத்தில் ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. உயிரை காப்பாற்றுவதில், டாக்டர்கள் எப்போதும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
என்ன தான் சமையல் குறிப்பு பார்த்து சமைச்சாலும், ஈடுபாட்டுடன் செய்தால் தான் சாப்பாடு ருசிக்கும்… அந்த மாதிரி எத்தனை கையேடுகள் கொடுத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் டாக்டர்கள் சிகிச்சை கொடுத்தால் தான், வீராங்கனை பிரியா இறப்பு போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அறிக்கை:
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், கட்சி தலைவரின் வாரிசு நடித்த படத்தை, முதல் நாள் முதல் காட்சியாக பார்த்து ரசிக்கிறார். இவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், அமைச்சரிடம் தன் மகன் படம் குறித்து விசாரிக்கிறார்.
‘திரையரங்கில் அந்த படத்தின், பாடல் காட்சிகளின் போது, பெண்கள் எல்லாம் வெளியே போகவில்லை’ என்று, அந்த அமைச்சர் சிலாகிப்பது, அப்பாவி மக்கள் தங்கள் தலையில் தாங்களே நெருப்பை அள்ளி கொட்டிக் கொண்டதைப் போல இருக்கிறது.
அவரு இடத்தை அவர் காப்பாத்திக்க வேண்டாமா…? ஒருவேளை, உங்க இடைக்கால பொதுச் செயலரின் மகன் சினிமாவில் நடித்தால், நீங்க முதல் காட்சி என்ன, முன்னோட்ட காட்சியே பார்த்துட மாட்டீங்களா!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சென்னை அசோக் நகரில் உள்ள, மத்திய அரசு பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு, அவரது சக மாணவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாணவருக்கு ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமை, ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில், தவறு செய்த அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய இடத்துல, இந்த மாதிரி ஒழுங்கீனங்களை சகித்துக் கொள்ளவே முடியாது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
‘கொள்கையை காப்பாற்ற, எதை வேண்டுமானாலும் செய்யலாம்; எதையும் இழக்கலாம். ஆனால், பதவியை காப்பாற்ற எதையும் செய்து விட முடியாது’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் எனும் கொள்கையை காப்பாற்ற, எதை வேண்டுமானாலும் செய்வதும், எதை வேண்டுமானாலும் இழப்பதும், பதவியை காப்பாற்றிக் கொள்ள, நேர்மையை, நீதியை பின்பற்றாமல் இருப்பதும், திராவிட மாடலின் இலக்கணம்.

திருக்குறளுக்கு பொருளுரை எழுதுற மாதிரி, முதல்வர் எதை சொன்னாலும், நீங்களும் பொருளுரை எழுத ஆரம்பிச்சிடுறீங்களே!
தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:
காசியில் நடக்கும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை, மத்திய அரசு நடத்துகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. விழாவில், சிறுபான்மையினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மொழி, ஒரு மதத்துக்கான அடையாளமல்ல. இம்மொழிக்கு கிறிஸ்துவ, முஸ்லிம் மதம் சார்ந்தவர்களும், வலு சேர்த்துள்ளனர் என்பதை மறந்துள்ளனர். ஆனால், தமிழுக்கும், தமிழர் வரலாற்றுக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
ஒருவேளை, அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தால் மட்டும், நம்ம முதல்வர் முதல் ஆளாக போய் நின்றிருப்பாரா, என்ன?
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் பேட்டி:
ஏழை, எளிய மக்களுக்கு, பல்வேறு இலவச திட்டங்கள் சென்று சேர வேண்டும் என, பிரதமர் மோடி அறிவிக்கிறார். ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. இங்கே உள்ள பலர், அதை முறைகேடாக திசை திருப்புகின்றனர். அது யார் என, இப்போது சொல்ல நான் விரும்பவில்லை.
மத்திய அரசின் திட்டங்களை தனி நபர்கள் கையாள முடியுமா…? தி.மு.க., அரசு தான் என்று, ‘பளிச்’னு சொல்லிட்டு போக வேண்டியது தானே!
சினிமா இயக்குனரும், நடிகரு மான தங்கர்பச்சான் அறிக்கை:
‘மாடல்’ என்ற, ஆங்கிலச் சொல்லை வாய் கூசாமல் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி முழங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது, ‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பரம் வாயிலாக, ‘சூப்பர்’ தமிழாக மாறிக் கொண்டிருக்கிறது.
இவற்றை உணர்ந்து தான் செய்கின்றனரா? தமிழ் வளர்ச்சித் துறை எனும் ஒன்று இனி தேவைதானா…? தமிழை மென்மேலும் அழிக்காதீர்கள்.
‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ என, கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவாங்க… அதற்கு ஏற்ற வகையில தான், தி.மு.க., அரசின் செயல்பாடுகளும் இருக்குது!
மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலர் பொன்னுசாமி அறிக்கை:
மின் கட்டண உயர்வால், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்திப்பது தொடர்ந்தால், ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சியிலும் பெரிய தாக்கம் உண்டாகும். மாநிலத்தின் பொருளாதாரமும் தேக்கமடையும்.
ஊழல், முறைகேடுகளை தடுப்பது, நிர்வாகச் சீரமைப்பு என, தமிழக மின் வாரியத்தை லாபகரமாக இயக்க பல வழிகள் உள்ள நிலையில், கட்டண உயர்வை அமல்படுத்துவது மட்டுமே தீர்வை தராது.
இவர் சொல்வது சரி தான்… அப்படி யோசித்தால், மின் வாரியம் லாபத்துல இயங்கும்… ஆனா, ஆளுங்கட்சியினர், அதிகாரிகள், ‘கல்லா’ கட்ட முடியாதே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்