பயிர் சாகுபடி காலத்தில் ஊரக வேலை திட்ட பணிகளை நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

கோவில்பட்டி: பயிர் சாகுபடி காலத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2007ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள 45 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் வேலைவாய்ப்பின்றி கிராமப்புற மக்கள் பிழைப்புக்காக நகரங்களுக்கு புலம்பெயர்வதை தடுத்து அவர்களுக்கு அந்தந்த கிராமங்களிலேயே வேலையை உறுதிபடுத்துவதே ஆகும்.

இத்திட்டத்தில் மரக்கன்று நடுதல், நீர்நிலைகள் தூர்வாருதல், அரசு ஊரக பகுதிகளில் செயல்படுத்தும் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்துதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் புதிய வீடு கட்டுவதில் பணிபுரிதல், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், கிராமங்களை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

துவக்கத்தில் இத்திட்டம் விவசாயத்தை முற்றிலும் பாதிக்கும் என்று விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டம் செயல்படுத்திய பின் கிராமப்புறங்களில் விவசாய பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை விட கூடுதலாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூடுதலாக ஊதியம் வழங்க முடியாத விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு மற்றவர்களை போல் ஊரக திட்டப் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். தற்போது தினக்கூலி ரூ.281 வழங்கப்படுகிறது. சிரமமில்லாத வேலை என்பதால் விவசாய பணிக்கு செல்வதை பெரும்பாலான தொழிலாளர்கள் தவிர்க்கின்றனர்.

இந்நிலையில் அரசு ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மையில் முன்னேற்றம் காணவும், விளைச்சல் குறியீட்டை உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கிறது. இவ்வாறு வேளாண் துறையில் அரசு தன்னிறைவை எட்ட வேண்டுமெனில் ஊரக வேலை திட்டத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களை இத்திட்டத்தில் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், உடல் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு அளிக்கலாம். 65 வயதுக்கு உட்பட்டவர்களை விவசாயப்பணியில் ஈடுபடுத்தி அரசு கூலி வழங்க வேண்டும். இதற்கென அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.