மதுரை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூட்டும் பொதுக்குழு பொருட்காட்சி போன்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு மட்டுமே இருக்கும் என அதிமுக மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ விமர்சனம் செய்தார்.
மதுரை ஒத்தக்கடையில் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. இதை அதிமுக மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ நேற்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை பட்டியலிட்டு அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
திமுக ஆட்சியில் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் பால், மின்சாரம், வீட்டு வரி என ஒவ்வொரு விஷயத்திலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதம் பல ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை திமுக முடக்க நினைக்கிறது. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்டப் போவதாகக் கூறியுள்ளார். தற்போது அவர் தனிக் கட்சியாக செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ் கூட்டுவது அதிமுக பொதுக்குழு அல்ல. அது ஓபிஎஸ் கட்சியின் பொதுக்குழு. அந்த பொதுக்குழு பொருட்காட்சியை போன்றது. அவரை அதிமுகவில் சேர்க்க வாய்ப்புகள் இல்லை. எத்தனையோ வாய்ப்பு கொடுத்தும் திருந்துவதாக இல்லை. உண்மையான அதிமுகவை முடக்க சதி செய்து வருகிறார்கள் என்றார். அப்போது நிர்வாகிகள் தக்கார் பாண்டி, வழக்கிறஞர் ரமேஷ், நிலையூர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.